மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து குளுகுளு சீசன் முடிவடையும் நிலையிலும் வார விடுமுறை நாளான இன்று அதிகாலை முதலே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகையால் சோதனைச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் உரிய நேரத்தில் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக சோதனைச்சாவடி இரண்டு நுழைவாயில் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனுமதிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.