கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாலைகளில் தேங்கிய நிலையிலும், குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக கூடலூர் அப்பாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு நடந்து செல்லும் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு முறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், குப்பை கழிவுகள் கொட்டப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.