தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பி வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று மாவட்டத்தின் கலெக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது. அதிலும் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகார்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஓசூர் பஸ் நிலையம் வெள்ளக்காடாக மாறியது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அனைத்து மக்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைப் போல ஓசூர் அருகில் உள்ள சின்ன எலசகிரி பேகேப்பள்ளி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளும் கனமழையால் வெள்ளைக்காடாக மாறியது. ஓசூர் சமத்துவபுரம் அருகில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதிகளிலும், அனுமந்தபுரத்திலும் குடியிருப்புகளின் உள்ளே மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் தாசில்தார் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அவர்களை ஓசூர் சமத்துவபுரத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தார். அதனை தொடர்ந்து இந்த கனமழையின் காரணமாக ஓசூர் அருகில் உள்ள மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஏரியும் நிரம்பியத. இந்நிலையில் ஏரி நீர் நீரில் அருகில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த தண்ணீர் மிகவும் துர்நாற்றத்துடன் வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிக அவதி அடைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ஓசூர் பழைய அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சுற்றுசுவர் சரிந்து விழுந்தது. இதில் சுற்றுசுவர் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிவேன் ஒன்று இடிபாடுகளில் சிக்கி அப்பளம் போல் சுக்கு நூறாக நொறுங்கியது. இதனையடுத்து தேனிகோட்டை, அஞ்செட்டி, தளி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அஞ்செட்டி அடுத்த மாவனட்டி கிராமத்தில் மழைநீருடன் கழிவு நீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு புகுந்தது மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய சாக்கடை கால்வாயில் மக்கள் ஆனந்த குளியல் போட்டனர். அதன் பிறகு நேற்று காலையிலும் மாவட்ட முழுவதும் கன மழை பெய்தது. இதனால் ஓசூர் தேனிகோட்டை தாலுகாக்களின் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நேற்று கலெக்டர் ஜெய்சந்திரபானு ரெட்டி விடுமுறை அறிவித்தார்.