வடிகால் உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை நேற்று மாலை சுமார் 3:30 மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. இதனால் கொடி மரத்து மூளை பகுதியில் இருக்கும் அகழியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வடியும் தண்ணீர் வடிகால் மூலம் வடவாற்றிற்கு சென்று சேரும். இந்த நிலையில் வடிகாலில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காந்தி சாலையில் உள்ள ராணி வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரால் ஆற்றங்கரை ஓரத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிப்பினால் அருகில் இருந்த மின்கம்பம் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பேரில் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாய்ந்த மின்கம்பத்தை நிமிர்த்தி வைத்துள்ளனர். இதனை அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வு பணிகளை விரைந்து முடிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். அது மட்டும் அல்லாமல் ரயில்வே கீழ் பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலை துறையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.