தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனை அடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இஸ்டபென் நகரில் கனமழை கொட்டித்தீர்த்ததில் ரவுட்பெல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.