Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

புதுஏரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கன மழையினால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து கிச்சிப்பாளையம், நாராயண நகர், பச்சப்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் பச்சப்பட்டி போன்ற சில இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஏற்காட்டில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பின் மலைப்பாதையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஒரு சில இடங்களில் அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஏற்காட்டு பகுதியில் 12 3/4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனமழை காரணமாக சாலையில் சிறு கற்கள் விழுந்ததால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வண்டியை ஓட்டிச் செல்ல முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் துரிதமாக செயல்பட்டு சாலையில் உள்ள கற்களை அப்புறப்படுத்தினர். அதன்பின் ஏற்காட்டில் மழையினால் அடிவாரம் பகுதியில் உள்ள புதுஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்பிறகு புதுஏரி மற்றும் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரி நிரம்பும் தருவாயில் இருந்தது. அதே நேரத்தில் அங்குள்ள செங்கலணை பகுதிக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் தாய் ஏரி எனப்படும் புது ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி வழிந்தோட தொடங்கியதால் அந்த பகுதி விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். இவ்வாறு பெய்த தொடர் மழையால் கன்னங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலானோர் ஏரிக்கு வந்து தண்ணீர் நிரம்பியுள்ள காட்சிகளை கண்டு களித்து செல்கின்றனர். ஆகவே  நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் யாரும் புதுஏரியில் குளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |