ஜம்முகாஷ்மீரில் நேற்று யூனியன் பிரதேசம் முழுதும் மிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. நீண்டதூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி இருக்கின்றனர். அங்கு உள்ள சேனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜம்மு – ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர் – கார்கில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
அதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உதம்பூர் பகுதியில் வரிசையில் நிற்கிறது. வானிலை மைய அறிவிப்பின் அடிப்படையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் திரிபுரா மலையிலுள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டு உள்ளது. கன மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை போகும் மக்கள் தற்போதைக்கு பயணத்தை நிறுத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். போக்குவரத்து சீரானதும் மீண்டுமாக பயணத்தை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.