கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிற்றாறு, பெருஞ்சாணி, பேச்சுப்பாறை போன்ற அணை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை குலசேகரம், திருநந்திக்கரை, திற்பரப்பு, சுருளக்கோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் மழையின் காரணமாக நேற்று மாலை அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை கடந்ததால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.