இளம்பெண் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அருண்குமார்(32)- வத்சலா (29) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அருண்குமார் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் விவாகரத்து கோரி இளம்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சூலக்கரை வள்ளுவன் நகரில் இருக்கும் தந்தை வீட்டில் இளம்பெண் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மாமனார் வீட்டிற்கு சென்று குழந்தையை பார்க்க வேண்டும் என அருண்குமார் தகராறு செய்துள்ளார். அப்போது தனது மனைவியின் மீது கொதிக்கும் பாலை அருண்குமார் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த வத்சலா விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அருண்குமாரை கைது செய்தனர்.