உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். நேற்று 2-வது நாளாகவும் போர் நீடித்தது. இதில், ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷிய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் இன்று அறிவித்துள்ளது. ஆனால், ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு பற்றி ரஷ்ய ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வெளியே ரஷ்ய ராணுவ படையை சேர்ந்த, பல ராக்கெட்டுகளை ஒரே சமயத்தில் ஏவும் திறன் வாய்ந்த வாகனம் ஒன்று அழிக்கப்பட்டும், அதன் பக்கத்தில் ஆடை முழுவதும் பனி படர்ந்தபடி வீரர் ஒருவரின் உடல் கீழே விழுந்து கிடப்பது போல புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.