சத்தியமங்கலம் அருகே கொடிக்காய் என நினைத்து விஷம் காயைத் தின்ற நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாசரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார், நிவேஷ் என்ற நான்கு சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்து காய்களைப் பறித்து வந்துள்ளனர். இந்த காய்களை கொய்யாக்காய் என்று நினைத்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு உரிய சிகிச்சை அளித்த பிறகு நான்கு சிறுவர்களும் தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.