கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு கருணைத் தொகை வழங்கப்படும். இதுவரை 865 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 781 மனுதாரர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் 42 மனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிவாரணத் தொகை பெறுபவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி மே 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது இன்னும் 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனுக்களை 30 அலுவலர்கள் கொண்ட ஒரு குழு பரிசீலனை செய்யும். அதன்பிறகு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்த கால அளவிற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருவாய் அலுவலரிடம் சென்று முறையிடலாம். இந்த மனுக்களை வருவாய் அலுவலரின் தலைமையிலான குழு இனத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்து உரிய தீர்வு காணப்படும். எனவே நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட கால அளவிற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.