செவிலியராக பணிபுரிந்த பெண்ணொருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சென்ற மாதம், 31ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மறுநாள் அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடலானது, அடக்கம் செய்வதற்காக ராணிப்பேட்டை அருகே நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில், நேற்று மதியம், 3:00 மணிக்கு ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டது. இதற்கு, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸை வழிமறித்துள்ளனர்.
அவர்களிடம் பாதுகாப்பாக உடல் அடக்கம் செய்யப்படும் என, 3 மணி நேரமாக வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள், உறவினர்கள் யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது, ஆம்புலன்சிலிருந்து இறக்கிய உடன் அடக்கம் செய்ய வேண்டும் என கூறினர். அவர்களின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்று, அதன்பின் செவிலியரின் உடல் வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னிலையில், பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், செவிலியர் உடலை அடக்கம் செய்ய இடையூறு செய்த விவகாரத்தில் 5 பேர் மீது, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.