தமிழகத்தில் கொரோனோ தொற்று கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020ஆம் வருடம் முதல் தற்போது வரையிலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 36 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ருபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க 182 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை பெய்த கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.96.92 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.