கணவன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மனைவிக்கு வீடு கொடுக்காத வீட்டு உரிமையாளரை போலீசார் சமாதானம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரியில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் அந்த நபர் உயிரிழந்து விட்டார். கணவனை இழந்த மனைவி வெங்கடகிரியில் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்வதற்கு முன்பே வீட்டு உரிமையாளர் வீட்டை பூட்டி சாவியை வைத்து கொண்டார்.
இதுபற்றி அந்த பெண் வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, “உங்களுக்கு நடத்தப்பட்டிருக்கும் கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே வீட்டு சாவியை தருவேன்” என்று கண்டிப்போடு கூறியுள்ளார். அதன்பின் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டு உரிமையாளரை எவ்வளவோ சமாதானம் செய்தும், அவர் சாவியை கொடுப்பதாக இல்லை. இதை அறிந்து அந்த இடத்திற்கு வந்த போலீசார் தற்போது வீட்டு உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.