கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அண்டை வீட்டினர் வீட்டுக்குள் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஒரு குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அண்டை வீட்டுக்காரர்கள் அவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்துள்ளனர். அந்த குடும்பம் 10 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதும் தம்பதியினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களின் மகன் தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். மேலும் அந்த குடும்பம் எவ்வளவு கெஞ்சியும் அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க மறுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து காவல்துறையினர் பூட்டை திறந்து விடுவித்தனர். மேலும் அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் அறிவுரைகளை வழங்கியதுடன் இந்த செயலில் ஈடுபடுவது பெரும் குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.