கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்ல, அதேசமயம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின் அவர்களது உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகிறது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. அவ்வப்போது புறநோயாளிகள் இரக்கமற்ற முறையில் அடக்கம் செய்யப்படுவது குறித்த வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் 12 உடல்களையும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஒரே குழிக்குள் தள்ளிவிட்டு அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரல் ஆகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.