உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது புதிய மரபணு மாற்றம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என பெயரிடப்பட்டுள்ளது. மலேசியாவில் 45 பேரை உள்ளடக்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப் படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிக் கொண்டிருந்த உணவக உரிமையாளர் ஒருவரிடமிருந்து இந்த வைரஸ் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்திருப்பதால் தற்போது நடந்து கொண்டிருக்கும் தடுப்பூசி ஆய்வுகள் எதுவும் பலனளிக்காது என்று மலேசிய பொது சுகாதார இயக்குனர் கூறியுள்ளார். அதே சமயத்தில் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், அதனால் நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரிக்கிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது சோதனை கட்டத்தில் இருந்துகொண்டிருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது எந்த விதத்திலும் பாதிக்காது என்று மருத்துவ ஆய்வு கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.