கொரோனா பாதிப்பிலிருந்து உயிர் தப்பியவர்கள் மனநல பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவை சேர்ந்த 6 கோடி மக்களின் மின்னணு சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அந்த சோதனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவு உள்ளடங்கியுள்ளது. மேலும் அந்த ஆய்வில் கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐந்தில் ஒருவர் மன நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நோயாளிகளுக்கு கவலை, மன சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இதுபற்றி பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் பால் ஹாரிசன் கூறும்போது, “கொரோனாவில் இருந்து தப்பியவர்கள் மன நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும் என மக்கள் அனைவரும் கவலைப்படுகிறார்கள். எங்கள் கண்டுபிடிப்புகளில் இது சாத்தியம் என்றே காட்டப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் மிக தீவிரமாக நடத்தப்பட்டு பல்வேறு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கான மருந்தை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.