இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கியது. ஆனால் அதில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள், விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மூன்று பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்ததாகவும், தற்போது எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.