கொரோனாவை எதிர் கொண்டதால் இந்தியாவிற்கு எந்த துயரத்தையும் தாங்கும் சக்தி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்தியா நேற்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று நாம் புதிய சாதனையை படைத்துள்ளோம். இந்தியா 247 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை எட்டியுள்ளது. இதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே காரணம். அதற்கு நாட்டு மக்களுக்கு முதலில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
100 கோடி தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் தொடக்கம். உலக அளவில் தடுப்பூசி செலுத்த தொடங்கிய போது இந்தியா குறித்து பல கேள்விகள் எழுப்பப் பட்டது. இந்தியா அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு எனவும், அங்கு எப்படி எல்லா மக்களுக்கும் தடுப்பூசி போடுவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது இந்த கேள்விக்கு எல்லாம் நூறுகோடி தடுப்பூசி என்பது பதிலாக அமைந்துள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி கொண்டு வந்ததை அடுத்து இந்த சாதனையை நாம் எட்டியுள்ளோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை அரசு உறுதி செய்தது.
சிறப்பான திட்டமிடல் காரணமாக இந்த இலக்கை நாம் எட்டிப்பிடித்து உள்ளோம். கொரோனா தாக்கத்தால் துவண்டுவிடாமல் நாட்டின் வளர்ச்சிக்காக திட்டங்களை செயல்படுத்தினோம். விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமது மக்களை பாதுகாத்தது. இனிவரும் காலங்களிலும் நம் பாதுகாப்பை உறுதி செய்வோம். எந்த துயரத்திலும் துவண்டு போகாமல் எதிர்த்துப் போராடுவோம்.
போர்க்களத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள கவசம் அணிவது போல் இந்த கொரோனா காலத்தில் நம் உயிரை காப்பாற்றுவதற்கான கவசம் தடுப்பூசி. மக்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இனிவரும் காலம் விழா காலம் என்பதால் மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். கொரோனாவை சந்தித்ததால் நமக்கு எந்த துயரத்தையும் சந்திக்கும் சக்தி கிடைத்துள்ளது” என்று அந்த உரையில் பேசினார்.