தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் அரசு அங்கீகார அட்டை,செய்தியாளர் அட்டை மற்றும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற செய்தியாளர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அட்டையின் நகல், செய்தியாளர் பணி புரிந்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகல், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்த அசல் சான்றிதழ், இருப்பிட முகவரி ஆக உணவு பொருள் வழங்கல் அட்டை, ஆதார் அட்டை நகல், இறப்பு சான்றிதழ் நகல், வாரிசு சான்றிதழ் நகல், மத்திய மற்றும் மாநில அரசால் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இழப்பு குறித்து வழங்கப்படும் உதவிகள் எதுவும் பெறுகிறாரா இல்லையா என்பதற்கான அசல் சான்றிதழ், கொரோனாவால் இறந்ததற்கான சிகிச்சை பெற்ற மருத்துவமனை சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.