Categories
தேசிய செய்திகள்

கொரோனா…உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரதமர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50,000 நிதி உதவி..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 33 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தலா ரூ.50,000 வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது. இதில் டாடா நிறுவனம் ரூ.1000 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி, பாபா ராமதேவ் ரூ.25 கோடி என வழங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்களான சச்சின், ரோஹித் சர்மா உள்ளிட்டோரும் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தமிழகத்தில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேருக்கும், தெலுங்கானாவில் 94 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |