மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய விஜயா அம்ருத் என்ற பெண், தன்னை திருமணம் செய்து 15 நாட்களில் தன்னை ஏமாற்றிவிட்டு, உடமைகள் அனைத்தையும் கொள்ளை எடுத்துச் சென்றதாக நாசிக்கை சேர்ந்த யோகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் அந்தப் பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் வேலை கிடைக்காத காரணத்தால் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை மற்றும் உடைமைகளை கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அவ்வாறு முதலில் ஸ்ரீசாந்த் என்பவரை திருமணம் செய்து 15 நாட்களில் ஏமாற்றிவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதன் பிறகு கர்ஜந்தை சேர்ந்த சந்தீப் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். மூன்று ஆண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி உடமைகளை கொள்ளை அடித்த காரணத்தால் அப்பெண்ணை கைது செய்து போலீஸார் காவலில் வைத்து இருக்கிறார்கள்.