கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள ஜவுளி, நகை, பெரிய வணிக வளாகங்கள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவையில் உள்ள வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி கடைகள், பொது போக்குவரத்து மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்பவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை மட்டுமே தங்களது நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.