இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து காங்கிரஸ் பேரணிகளும் ரத்து செய்யப்படுவதாக ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், இப்போது இருக்கும் சூழலில் பெரிய பேரணிகளை நடத்துவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை அனைத்து அரசியல் தலைவர்களும் சிந்தித்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.