இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் நாட்டில் நாளுக்கு நாள் குழுவினால் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், மாணவர்களின் உடல் நலன் மற்றும் தேர்வு நடத்தும் பணியாளர்கள் ஆகியோரின் உடல் நலன் ஆகியவற்றை கருதி ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு இம்மாதம் இறுதியில் நடக்க இருந்தது ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாத நுழைவுத் தேர்வு தேதிகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மே மாத தேர்வுக்கு முன் பதிவு செய்ய வேண்டிய நாள் குறித்தும் பிறகு தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.