கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகவும் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கிறது. அந்தக் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழா தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது.
அதன்படி சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா தளங்கள் மற்றும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. கொரோனா அச்சத்தால் 23 ஆம் தேதி நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.