தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு அதாவது ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதனைப் போலவே கோவை மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தமிழகத்தில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மீண்டும் கட்டாயமாகப்பட்டுள்ளது . அவ்வாறு முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெளியே செல்லும்போது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய சூழலில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருவேளை பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்துகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதல் கட்டமாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.