தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதன் காரணமாக தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு,தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பொது போக்குவரத்தில் கட்டுப்பாடுகள்,நீச்சல் குளங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.