தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை மாதவரத்தில் ரோட்டரிசங்கம் சாா்பாக ரூபாய் 2.50கோடியில் அமைக்கப்பட்டிருக்கும் 12 படுக்கைகளுடைய டயாலிசிஸ் மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தாா். இதில் மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதா்சனம், ரோட்டரி சங்க ஆளுநா் ஜெ.ஸ்ரீதா் உட்பட பலா் கலந்துகொண்டனர். இந்நிலையில் அமைச்சரான மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் பேசினார். அவர் பேசியதாவது “தமிழ்நாடு அரசின் சாா்பாக 150டயாலிசிஸ் இயந்திரங்கள் சீா்காழி,புதுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 5.9 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது.
இவற்றிற்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீா்வு ஆகும். சிறுநீரகத்திற்கு காத்திருப்போா் பட்டியல் அதிகமாகவுள்ளது. நிரந்தரத்தீா்வு கிடைக்கும் வரையிலும் டயாலிசிஸ் சிகிச்சை அவசியமாக இருக்கிறது. 18 -59 வயது வரை இருப்பவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால், அவா்கள் தனியாரிடம் கட்டணம் செலுத்தி பூஸ்டா் தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். அவ்வாறு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த வயதினா் பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஆா்வம் காட்டுவதில்லை. அதாவது சிஎஸ்ஆா் நிதி பங்களிப்புடன் இந்த வயதினருக்கு இலவசமாக பூஸ்டா் தடுப்பூசியை போடும் திட்டத்தை மாதவரத்தில் ரோட்டரி சங்கத்தினா் விரைவில் தொடங்க இருக்கின்றனர். உலகம் முழுதும் 22 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருக்கிறது.
அந்நாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்களை விமான நிலையங்களில் சுகாதாரத்துறை குழுவினா் கண்காணித்து வருகின்றனா். தமிழ்நாட்டில் இதுவரையிலும் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பில்லை. பணிநேரத்தில் அரசு மருத்துவா்கள் மருத்துவமனையில் இல்லையென்றால், அவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையில் தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்கவேண்டிய சூழல் இதுவரை ஏற்படவில்லை. மொத்த ஆா்.டி.பி.சி.ஆா் பரிசோதனை எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கும் மேல் தொற்று பாதிப்பு இருந்தாலோ, மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக அனுமதி இருந்தாலோ கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.