Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவு!

கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி வரை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெற உள்ளதாகவும், ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்று நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பொது போக்குவரத்து, ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் மதுபான கடைகளும் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பஸ்கள், ரயில்கள் இயங்காது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் பேரவையை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்த அலுவல் ஆய்வு கூட்டம் கூடி ஆலோசனை நேற்று நடைபெற்ற நிலையில் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Categories

Tech |