திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதிச் சீட்டு எடுத்து வர வேண்டும். உள்ளூர் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் 3000 பக்தர்கள் நேரடியாக அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.கட்டுப்பாடு விதித்த நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் இந்த அனுமதிச்சீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். தீபத் திருவிழா வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.ஒவ்வொரு வருடமும் வழக்கமாக 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தன்று தரிசனம் செய்ய வருவார்கள்.ஆனால் கொரோனா காரணமாக பக்தர்களின் நன்மைக்காக 17ஆம் தேதி மதியம் ஒரு மணி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லும் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை. மற்ற நாட்களில் கிரிவலம் செல்லலாம்.மேலும் கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்ய அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.