அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு பிப்ரவரி 15 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை கருத்தில் கொண்டு ஜனவரி 25 முதல் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த மாதத்தில் இருந்து மூடப்பட்ட 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அம்மாநிலம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அரசு அடுத்த சில நாட்களுக்குள் ஊரடங்கு உத்தரவு நேரங்களை தளர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்றின் நிலைமையை கண்காணித்து வரும் அரசு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 2,000 ஆக இருப்பதாக தகவல் அளித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அசாம் மாநிலத்தில் தினசரி 2,000 ஆக கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையானது 1,000 ஆக குறைய காத்திருக்கிறோம்.
அதற்கு இன்னும் 2 முதல் 3 நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. இதனிடையில் இரவு 10 -11 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அசாமில் பெரும்பாலும் பிப்ரவரி 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எளிதாக இருக்கும் என்று அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வரையிலும் அசாம் மாநிலத்தில் 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களுக்கு மாற்று நாட்களில் நேரடி வகுப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.