சீன நாட்டில் சென்ற 2019ஆம் வருடம் இறுதியில் உகான் நகரில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நாடு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும் சீனாவில் இதற்கு நேர் எதிராக ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகளவில் பரவலை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டின் பொருளாதார மையமாக விளங்ககூடிய ஷாங்காய் நகரில், ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. 2.60 கோடி மக்கள் வசிக்ககூடிய இந்நகரில் சென்ற 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா அலை எழுச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் வீடுகளுக்குள் மக்கள் முடங்கியுள்ளனர். இருந்தாலும் அங்கு உள்ளூர் தொற்றாக நேற்று முன்தினம் மட்டும் 3,590 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கிடையில் 21 ஆயிரத்து 500 உள்ளூர்வாசிகளுக்கு அறிகுறியற்ற பாதிப்பு உள்ளதாக ஷாங்காய் நகர சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஷாங்காய்நகரில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த பின், முதன் முறையாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என உள்ளூர் ஊடகதகவல் தெரிவிக்கிறது. இதுவரையிலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 89-91 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களுக்கு கடும் நோய் பாதிப்புகள் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஷாங்காய்நகரில் 2,417 நபர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அறிகுறியற்ற சூழ்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 19 ஆயிரத்து 831 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.