தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 6ஆம் தேதி யானை சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதுமலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
அதனால் வளர்ப்பு யானைகளுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி வனத்துறையினர் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளர்ப்பு யானைகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க சவரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.