கொரோனா பீதி காரணமாக, இன்று முதல் உச்சநீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் மட்டும்தான் வழக்குகளின் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனை குறைக்கும் எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதில் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமர்வுகளும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 6 அமர்வுகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் 12 அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், நீதிமன்ற ஊழியர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் உள்ள யாரும் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.