புதுக்கோட்டை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உடம்பில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை கொள்ள நேரிடும் சூழ்நிலையில், மருத்துவமனையில் முதலில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதனுடைய முடிவு வெளியான பின்பு நோயாளிகளுக்கு சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் 18 வயதான இளைஞர் ஒருவர் 62 முறை டயாலிசிஸ் சிகிச்சை செய்துள்ளார்.
இந்த முறை அதே டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனைக்குச் செல்லும்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்துள்ளது. இதையடுத்து அவர் ராணியார் அரசு மருத்துவமனைக்குச் சென்று தனக்கு கொரோனா இருப்பதாகவும், அதே சமயம் டயாலிசிஸ் சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுக்க, அங்குள்ள அரசு மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை முறையை அளித்து அவரது உயிரை காப்பாற்றியதுடன், அவருக்கு கொரோனா சிகிச்சையும் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனை கைவிரித்த நிலையில் இளைஞரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.