கொரோனா கட்டுப்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொற்று பாதிப்பு 20 என இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 1400 ஆக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பி ஏ 5, பி ஏ 2.38 வகை வைரசால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற 26 சதவீதம் பேருக்கும், அலுவலகங்கள் பணியிடங்களில் இருந்து 18 சதவீதம் பேருக்கும், பயணத்தின் போது 16 சதவீதம் பேருக்கும், கல்வி நிறுவனங்களுக்கு சென்ற போது 12 சதவீதம் பேருக்கும் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வருவாய் துறை, போலீஸ், உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.
அலுவலகங்கள் பணியிடங்களுக்கு வருவோருக்கு தினந்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் அவர்களை பரிசோதனைக்கு அல்லது தனிமைப்படுத்திக் கொள்ள அனுப்பி வைக்க வேண்டும். எப்போதும் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும். கை கழுவும் வசதிகளை வளாகத்தில் ஏற்படுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காற்றோட்டமான வகையில் பணியிட அறைகள் இருப்பது முக்கியம் என்று கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.