தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு தன்மையைப் பொருத்து மாநில அரசாங்கம் பள்ளி திறப்பது பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போதைய நடைமுறை தொடரும். அதில் எந்த ஒரு மாற்று வழிக்கும் வாய்ப்பு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.