Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – பறிக்காமல் செடியிலேயே கருகும் மல்லிகை… விவசாயிகள் வேதனை..!!

ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை.

இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர்.  செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில்  ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன்.

இந்த நேரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 5 டன் மல்லிகை விற்பனைக்காக மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு விவசாயிகள் அனுப்பி வந்தனர். இதன் மூலம் மலர் சந்தையில் 12 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடப்பட்டுள்ளது.

அதனால் மல்லிகையை விற்க  நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மறுக்க முடியாத நிலையில் அவற்றைப் பறித்து என்ன செய்வது என செடிகளையே விட்டுவிட்டு வேதனையோடு இருக்கிறார்கள் விவசாயிகள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீரை விலைக்கு வாங்கி சாகுபடி செய்து வந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடியில் ஈடுபட்டு வந்ததாக கூறும் விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை எப்படி ஈடுகட்டுவது என கலங்குகின்றனர்.

மல்லிகை விற்றால் மட்டுமே வருமானம் என்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகவது  அரசு உதவ வேண்டும் என்கிறார்கள். தற்போதைய நிலைக்கு நிவாரணம் வழங்குவதோடு நின்றுவிடாமல், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தப் பகுதியில் நிறுவி தங்கள் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என மல்லிகை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |