ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த லஞ்சம் தர முன்வந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் சில மருத்துவர்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்காக லஞ்சம் தருவதற்கு முன்வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் சுமார் 20 தடுப்பூசிகள் தங்களுக்கு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது. இதனோடு மட்டுமன்றி பிரிஸ்டல் மற்றும் ஒர்த்திங் போன்ற பகுதியில் இருக்கும் மருத்துவர்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளது.
இதில் ஒர்த்திங் பகுதியில் இருக்கும் மருத்துவர்கள் இதுகுறித்து உரிய அமைப்பிற்கு புகார் அளித்துள்ளனர். அதில் எங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கினால் ஒவ்வொருவருக்கும் தலா 5000 பவுண்டுகள் வழங்க தயாராக உள்ளோம் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மொத்தமாக 1,00,000 பவுண்டுகள் வரை தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும் அந்த நிறுவனமானது, தங்கள் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நாங்கள் தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்க்காக மட்டும் தான் தடுப்பூசி வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். எங்களின் நல்ல முயற்சி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.