அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இன்னும் முடிவு எடுக்காத சூழ்நிலையில், இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடெர்னா ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி இறுதிகட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. சோதனையில் வெற்றி பெற்றாலும் அவசர தேவைக்காக பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முடிவெடுக்க காலதாமதம் செய்து வந்தது. ஆனால் கோடிக்கணக்கான தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்தது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பியவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது வரை இங்கிலாந்தில் கொரோனவால் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஃபைசர் தடுப்பூசி, 4 கோடி டோஸ்களுக்கு இங்கிலாந்து அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இதனை வைத்து அந்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். முதலில் முதியவர்கள், காப்பகங்களில் தங்கியிருக்கும் நபர்கள், அவர்களை பாதுகாக்கும் ஊழியர்கள், போன்றவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.
இதில் அடுத்தகட்டமாக அடுத்தவாரம் முதல் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். ஃபைசர் தடுப்பூசிக்கு இங்கிலாந்து சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சியைத் தருவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார் . இதனால் மக்கள் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.