இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த மாதம்,மனிதர்களுக்கு அதனை செலுத்தி சோதனை நடத்த இருக்கிறது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு கிடைக்கப்பெற்று, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
தற்போது ஒரு புதிய தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அந்த தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ என்று பெயரிட்டுள்ளது . இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டு வெற்றிகரமான சோதனை முடிவில் அடுத்தக்கட்டமாக மனிதர்களுக்கு செலுத்த மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் ஒப்புதலை வழங்கி உள்ளனர் .
கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கிடையே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார் ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .முதலில் செப்டம்பரில்தான் மனிதர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது ஜூலை மாத பிற்பகுதியில் இந்த சோதனை நடைபெற இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இதனை அடுத்து,அந்த நிறுவனத்தின் மூத்த அறிவியல் அதிகாரி பால் ஸ்டபல்ஸ், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்கள் இலக்கு, அடுத்த ஆண்டில் உலகளவில் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை வழங்குவது ஆகும். இது பாதுகாப்பானதும், பயனுள்ளதுமாக இருக்கும்.இந்த (ஜூலை) மாதத்தில் இருந்து எங்கள் தடுப்பூசியை ஒரு சிறிய பிரிவினருக்கு செலுத்தி பாதுகாப்பு தன்மையை சோதித்து,அதன்பின்னர் படிப்படியாக பெரிய அளவில் ஏராளமானோருக்கு செலுத்தி சோதித்து பார்ப்போம்.
எனவே இந்த ஆண்டில் எப்படியும் கொரோனா தடுப்பூசி, சந்தையில் விற்பனைக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.