கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் முதல்வர் பாலாஜி போன்றோர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீனாவை நேரில் சென்று பார்த்து உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதனால் பாதிப்பு உண்டாகவில்லை. மேலும் தடுப்பூசி செலுத்திய பின்பு அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவர்கள் அவருக்கு பல பரிசோதனைகளை செய்துள்ளனர். அதில் அவருக்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் சில நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றும் கூறியுள்ளனர்.