Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் வேகம்…. மத்திய அரசு வலியுறுத்தல்….!!!!

கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர நாடு தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு நேற்று நடத்தியது. இக்கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார். நாடு முழுதும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கான வேகத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்குமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் பேசியதாவது, எந்த சூழ்நிலையிலும் தடுப்பூசிகளை வீணாகாமல் பார்த்துக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஒரு தீவிர இயக்கம்போல் நடத்த வேண்டும். வரும் ஜூன், ஜூலை மாதங்களில் வீடுதோறும் சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் 2-வது கட்டத்தின்போது முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறைகள், செங்கல்சூளைகள் விடுபடக்கூடாது. ஆகவே அங்கு சென்றும் முதல், 2வது மற்றும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள் செலுத்தாதவர்களுக்கு போடுவதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனியார் தடுப்பூசி மையங்களில் 18 -59 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை சரியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் ஆன நிலையில்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் எனும் பெயரில் போடப்படுகிறது. எனினும் வெளிநாடுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக செல்வோர் 2வது டோஸ் செலுத்திக்கொண்ட 90 நாளில் முன்னெச்சரிக்கை டோஸ் போடுவதற்கு, வெளிநாட்டு பயணத்துக்கான ஆதாரங்களைத் தரவேண்டும் என்று சில மாநிலங்களில் கேட்பதாகவும், எந்த சூழ்நிலையிலும் இதில் எழுத்துபூர்வமான ஆதாரங்களைக் கேட்டு வற்புறுத்தக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தினார். இத்தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Categories

Tech |