கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்களில் பிரதமர் மோடியின் படமும் போட வேண்டும் என்று பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டபாலம் பகுதியில் உள்ள மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் விளம்பர பதாதைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சாலை மறியலில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சண்முகம் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தாசில்தார் தமிம் ராஜா, இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் காவல்துறையினர் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு பின்னரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக கட்சியினர் 11 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் சாலை மறியலால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.