கோவிட் ஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ள தன்னார்வலர் தனக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ள குற்றச்சாட்டுகளை சீரம் நிறுவனம் மறுத்துள்ளது.
ஆஸ்போர்ட பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தான கோவிட் ஷீல்டு உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிட் ஷீல்டு தடுப்பூசி பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனையில் சென்னையைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் தன்னார்வலராக பங்கேற்றுள்ளார். கடந்த ஒன்றாம் தேதி இவருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நிலையில் முதல் 10 நாட்களுக்கு எந்தவித விளைவுகளும் ஏற்பட வில்லை ஆனால் பத்து நாட்களுக்கு பின்பு கடுமையான தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டால் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் யாரையும் அடையாளம் காண முடியவில்லை எனவும் அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தன்னார்வலரின் சார்பில் சீரம் நிறுவனம் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு 5 கோடி ரூபாய் இழப்பீடும் கேட்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சீரம் நிறுவனம் பதிலுக்கு 100 கோடி ரூபாய் இழப்பீடு கோர உள்ளதாக அறிவித்துள்ளது.