உலக சுகாதார அமைப்பானது மாடெர்னா நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கர்ப்பிணிகள் செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, மூன்று வாரங்களுக்கு முன்னரே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் எந்த ஒரு நிறுவனமும் கர்ப்பிணி பெண்களுக்கு சோதனைகள் செய்து தங்களின் தடுப்பூசி அவர்களுக்கு பாதுகாப்பானது தான் என்பதை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கர்ப்பிணிப் பெண்கள் மூன்று மில்லியன் பேர் உள்ளனர்.
எனவே கர்ப்பிணிகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பானது என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அமெரிக்காவின் மருத்துவர்கள், கர்ப்பிணிகளுக்கு தான் கொரோனா பாதிப்பு எளிதில் தொற்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே அவர்களே தங்களுக்கு இந்த தடுப்பூசி தேவையா? என்ற முடிவை எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்கள்.