தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை.
எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி செயல்படும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவர ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். நேற்று மதியம் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் என்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.